ஜூலை மாதத்திற்கும் ரேசன் பொருட்கள் இலவசம்
சென்னை: தமிழகத்தில், வரும் ஜூலை மாதத்திற்கும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான டோக்கனை வீடுகளிலேயே வழங்கப்படும்இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன்கார்டுதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உடன், ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.நோய் தொற்று ஏற்படாதவண்ணம் மேற்படி, அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் செல்ல வேண்டும் என்பதால், வரும் ஜூலை 6 முதல் 9 வரை ரேசன்கார்டுதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட ரேசன் அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது ரேசன் விலை கடைகளுக்கு 10ம் தேதி முதல் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம்.தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். பொது மக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை இலவச பொருட்களை பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.