பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கும் தலைமை ஆசிரியர்
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கி வருகிறார் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இவர்கள் தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக போதிய வருமானம் இன்றித் தவித்து வருவதை அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், தனது சொந்தச் செலவிலும், தன்னார்வலர்கள் உதவியுடனும் அவர்களுக்குக் கடந்த 3 மாதங்களாக அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறார்.
பள்ளி வளாகத்தில் இன்று (ஜூலை 3) நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் பெற்றோர், ஆதரவற்ற பெண்கள், தூய்மைப் பணியாளர்கள் என 125 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் ஆகியவற்றை வட்டாரக் கல்வி அலுவலர் அருள்தாஸ் நேவீஸ், ரோட்டரி சக்தி சங்க தலைவி ஹேமலதா, தொழிலதிபர் ஜோசப் ஆகியோர் வழங்கினர்.
இதுவரை இப்பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 389 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், ஆசிரியை சகாயராணி, கோபி மற்றும் திருச்சி வாய்ஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
