மதிப்பெண் பதிவேற்றும் பணி; முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
பல்லடம் : பல்லடத்தில் நடந்து வரும் மதிப்பெண் பதிவேற்றும் பணியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.கொரோனா பரவலால், பத்தாம் வகுப்பு, மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களின் மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதற்கான சிறப்பு முகாம் நேற்று பல்லடத்தில் நடந்தது.பல்லடம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லடம், காங்கயம் மற்றும் பொங்கலுார் ஒன்றிய பகுதிகளில் உள்ள, 104 அரசு மேல்நிலை, மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும், பத்தாம் வகுப்பு, மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான மதிப்பெண் பதிவேற்றும் பணி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.முகாம் சிறப்பு அலுவலர் நாகராஜன் கூறுகையில், ''பல்லடம் கல்வி மாவட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பில், 5,025 மாணவர்கள், மற்றும் பிளஸ் 1-ல், 4,403 மாணவர்கள் என, மொத்தம், 9,428 மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது,'' என்றனர்.நேற்று நடந்த சிறப்பு முகாமை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும்.அதற்கு தேவையான இட வசதிகளை, முகாம் சிறப்பு அலுவலர் மூலம் கேட்டு பெற்று, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி சென்றார்.
